Advertisement
Lennim Jobs
அதிமுக தொண்டர்களுக்கு.. முதலமைச்சர் வேண்டுகோள்..!

24-11-2019

அதிமுக தொண்டர்களுக்கு.. முதலமைச்சர் வேண்டுகோள்..!

24-11-2019

உள்ளாட்சி தேர்தல் வருவது உறுதி என்றும், அதற்கு அனைவரும் தயாராக இருக்க வேண்டும் என்றும், அதிமுக தொண்டர்களை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டிருக்கிறார். யார் கட்சி தொடங்கினாலும், அதிமுகவுக்கு கவலை இல்லை என்றும் முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார். 

சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கிளை கழக செயலாளர் பதவியில் துவங்கி படிப்படியாக உயர்ந்து இன்று முதல்வர் என்ற நிலைக்கு வந்திருப்பதாகவும், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்களும், அவ்வாறே கட்சியில் உயர்ந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

ஆளும் அதிமுகவை எதிர்கொள்ள முடியாமல், பொதுமக்களை தூண்டிவிட்டு, மறைமுகமாக நெருக்கடி கொடுப்பது, திமுக தலைவரின் வாடிக்கையாக மாறிவிட்டது என முதலமைச்சர் குற்றம்சாட்டினார்.

கட்சியே துவங்காமல் சிலர் பேசுவதாகவும், யார் கட்சி தொடங்கினாலும் அதிமுகவுக்கு கவலை இல்லை என்றும் முதலமைச்சர் கூறினார்.. ஆனால், அடுத்தவர்கள் மீது பொய் குற்றச்சாட்டை வைத்து கட்சி தொடங்க கூடாது என்றும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுவதுபோல், மத்திய அரசுக்கு, ஆளும் அதிமுக அரசு அடிமை இல்லை என்றும், மக்கள் நலனுக்கு எதிரான திட்டங்களை எதிர்ப்பதாகவும் முதலமைச்சர் கூறினார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அமைக்கப்படும் பிரம்மாண்டமான மணிமண்டபம் விரைவில் திறப்பு விழா காண இருப்பதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

சட்டம் ஒழுங்கு சரியில்லை என திமுக தலைவர் கூறுவதாகவும், ஆனால், மாமல்லபுரத்தில், சீன அதிபரும்-பிரதமரும் மரத்தடியில் அமர்ந்து பேசுவதே, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எவ்வளவு சிறப்பாக இருக்கிறது என்பதற்கு ஒரே சான்றாகும் என்றார்.

உள்ளாட்சி தேர்தல் வருவது உறுதி என்றும், அதற்கு அனைவரும் தயாராக வேண்டும் என்றும், அதிமுக தொண்டர்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார்.

பொதுக்குழுவில் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தற்போது, அதிமுகவின் கட்சி வங்கி கணக்கில், 226 கோடியே 90 லட்ச ரூபாய் நிரந்த வைப்புத் தொகையாக இருப்பதாகவும், தேர்தல் நிதியாக 46 கோடியே 70 லட்ச ரூபாய் பெறப்பட்டதாகவும் தெரிவித்தார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு அதிமுக சார்பில் 19 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதாகவும் கூறினார். அனைவரிடத்திலும், ஒற்றுமை உணர்வு உறுதி பட இருந்தால் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவது உறுதி என ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டார்.

அதிமுக பொதுக்குழுவில் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, வருகிற 2021ஆம் ஆண்டு தேர்தலில் ஏதோ அதிசயம் நடக்கும் என்று சிலர் கூறுவதாகவும், அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்று ஆட்சியில் அமருவது என்பது தான், அந்த அதிசயம் என்றும் கூறினார்.

.