திரைப்படத்தை மிஞ்சும் திடீர் ட்விஸ்டுகள் - ஜெ மரணத்தில் ஆறுமுகசாமி ஆணையத்தின் கருத்துகள் என்ன? முழு விபரம் Part 1

திரைப்படத்தை மிஞ்சும் திடீர் ட்விஸ்டுகள் - ஜெ மரணத்தில் ஆறுமுகசாமி ஆணையத்தின் கருத்துகள் என்ன? முழு விபரம் Part 1

ஜெயலலிதா மரணம் தொடர்பாக எழுந்த சர்ச்சையை அடுத்து உண்மையை வெளியே கொண்டுவருவதற்காக அரசு ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்தது. இந்த ஆணையம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக தங்கள் அறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பித்தது. 

ஆறுமுகசாமி அணையம் சமர்ப்பித்த அறிக்கையில் ஆணையம் சார்பாக சில கருத்துக்கள் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது. அவை பின்வருமாறு;

1.மறைந்த முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னர் ஏற்பட்ட சில குறிப்பிடத்தக்க நிகழ்வுகள், வழக்கின் உண்மை விவரங்களைப் போலவே , வழக்கு குறித்து எடுக்கப்பட வேண்டிய முடிவுகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் அவை தவிர்க்க முடியாதவை ஆகின்றன.

2. மிகச் சிறப்பான சினிமா வாழ்க்கையுடன் எம்ஜிஆர் என்று அழைக்கப்படும் எம்.ஜி. இராமச்சந்திரனின் மறைவுக்குப் பின்னர் , தமிழகத்தில் சிறந்த அரசியல் வாழ்க்கையையும் கொண்டிருந்த மறைந்த முதல்வர் , 25 ஆண்டுகளுக்கும் மேலாக அஇஅதிமுகவில் தன்னிகரில்லாத தலைமையாக வலம் வந்தார்.

3. மறைந்த முதல்வர் எம்ஜிஆரின் மறைவுக்குப் பின்னர் ,தனது போயஸ் கார்டன் இல்லத்தில் தனியாக வசித்து வந்தார். மறைந்த முதல்வருக்கும் அவரது நெருங்கிய தோழியும், ஆலோசகருமான சசிகலா இருவருக்குமிடையேயான புரிதல்களின் அடிப்படையில் சசிகலா போயஸ் கார்டன் இல்லத்திற்கு இடம் பெயர்ந்தார். இருவருக்குமிடையேயான இணக்கம், ஒற்றுமையினால் அவர்களிருவரும் உடன்பிறவா சகோதரிகள் என்று அழைக்கப்பட்டனர்.

4. அப்போதுதான் விதியின் சதியால் பெங்களூருவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில்  நிலுவையில் இருந்த சொத்துக்குவிப்பு வழக்கில் மறைந்த முதல்வர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டாரெனில், கட்சியையும் முதல்வர் பதவியையும் அபகரிக்க சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் இரகசிய திட்டம் தீட்டியதாக , பெங்களூரில் டெஹல்கா என்ற பத்திரிகையில் வெளியான செய்தியின் அடிப்படையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா வுக்கு புலனாய்வுத் துறையின் இரகசியத் தகவல் கசிந்து , நிலைதடுமாறி நிலைதடுமாறி இருவருக்கிடையேயான உறவு கசந்து பிரிவினைக்கு வழிவகுத்தது. 2011ஆம் ஆண்டு டிசம்பரில் சசிகலா போயஸ்கார்டனை விட்டு வெளியேறும்படியானது. இது அதிகாரத்தின் மீதான ஒரு அதீத ஆசையைத் தூண்டும்.

5. 2011 ஜனவரியில் நடைபெற்ற அஇஅதிமுக மாநாட்டில் மறைந்த முதல்வர் சசிகலாவைக் கடுமையான வார்த்தைகளால் தாக்கினார். சசிகலா நம்பிக்கை துரோகம் செய்ததாக வெளிப்படையாக குற்றம் சாட்டப்பட்டார். அப்போது மறைந்த முதல்வரின் வெறுப்புக்குள்ளான சசிகலா உடன் எவ்விதத் தொடர்பும் இருக்கக் கூடாது என்று கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் எச்சரிக்கப்பட்டனர். இருவருக்குமிடையேயான நட்புரிமை மறைந்து பிரிவினை ஏற்பட்ட இந்த நிகழ்வு , சில சமயங்களில் உண்மை, கற்பனையினும் வலிமையானது என்பதைத் தெளிவாக்குகிறது.

6. சசிகலா மறைந்த முதல்வரிடம் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்டு , இருவருக்குமிடையேயான கருத்து வேறுபாடுகள் களையப்பட்டு சமரசத்தினால் , 31-03-2012 அன்று மறைந்த முதல்வர் மற்றும் சசிகலா இருவரும் போயஸ் கார்டனில் வசிக்கத் தொடங்கினர். இருவருக்கும் இடையேயான உறவு இயல்பானதாக தோன்றினாலும், பிளவிற்கு முன்னர் இருந்ததைப் போல நட்புரிமை இல்லை என்பதை கிடைக்கப்பெறும் பதிவுகளிலிருந்து அறியலாம். இதனால் மறைந்த முதல்வர் 22-09-2016 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் வரை சசிகலா குழப்பநிலையிலேயே இருந்து வந்தார்.

7. நவம்பர் 2011 இல் சசிகலா மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் போயஸ் கார்டனில் இருந்து வெளியே அனுப்பப்பட்டார் என்பது சசிகலாவின் உறுதிமொழிப் பத்திரத்தில் இருந்து அறியலாம். C.W.14.கிருஷ்ணப்பிரியா, C.W.17 சிவக்குமார், C.W.23.ராஜம்மாள் ஆகியோரும் இதையே கூறினர். மேலும் C.W.18, C.W.20 மற்றும் C.W.21 ஆகியோரும் சசிகலா மறைந்த முதல்வரின் வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவது குறித்துத் தெரிவித்திருந்தனர்.  சில கசப்பான உறவுகளால் , மறைந்த முதல்வர் ஜெயலலிதா , சசிகலா மற்றும் அவரது உறவினர்களை போயஸ் கார்டனை விட்டு வெளியேறுமாறு கூறியிருப்பார். ஆனால் டெஹல்கா வில் வெளியான கட்டுரையை உருவாக்கியது யார் என்பது கண்டறியப்படவில்லை. C.W.25 தான் அக்கட்டுரையைப் பற்றி கூறியுள்ளார். ஆனால் தனக்குத் தனிப்பட்ட முறையில் எதுவும் தெரியாது என்றும் Tehelka.com லிருந்து தான் தெரிந்து கொண்டதாகவும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார். 

8. 2012 ஏப்ரலில் , மறைந்த முதல்வர் ஜெயலலிதா அரசியலிலும் அதிமுக கட்சி நடவடிக்கைகளிலும் சசிகலா தலையிடுவதில்லை என்ற உறுதியைப் பெற்ற பின்னரே சசிகலாவை மீண்டும் தன்னுடைய இல்லத்தில் இணைத்துக் கொண்டார். இருப்பினும் அவர் சசிகலாவின் மற்ற குடும்ப உறுப்பினர்களை போயஸ் கார்டனுக்குள் அனுமதிக்கவில்லை.

9. 2012 ஏப்ரலில் மீண்டும் போயஸ் கார்டன் இல்லத்திற்குத் திரும்பியதிலிருந்து , மறைந்த முதல்வரின் இறப்பு வரை அவருக்கு உதவுவதுடன் அவருடைய அனைத்துத் தனிப்பட்ட கடமைகளையும் சசிகலா கவனித்துக் கொண்டிருந்தார்.

10. 2015 இல் ஒருமுறை மறைந்த முதல்வர் உடல்நலப் பரிசோதனைக்காகச் சென்றிருந்த போது, LV dysfunction இருப்பது கண்டறியப்பட்டது என்பதற்கு ஆதாரங்கள் ஏதுமில்லை. சாட்சியங்களின்படி , இதயநோய் நிபுணரிடம் இதற்கான சிகிச்சை எதுவும் எடுக்கப்படவில்லை.

11.20.9.2016 அன்று கே.எஸ். சிவக்குமார் சபரிமலைக்கு சென்றிருந்ததால் சசிகலா அவரிடம் தொலைபேசியில் உதவி கோரியதற்கு , சிவக்குமார் காய்ச்சலுக்கு பரசிட்டமோல் வழங்குமாறு சசிகலாவிடம் கூறியுள்ளார். சசிகலா மறைந்த முதல்வருக்கு பாரசிட்டமால் வழங்கியதால் காய்ச்சல் சரியானதாக கூறினார். மீண்டும் இடையிடையே காய்ச்சல் ஏற்பட்டதால் சிவக்குமாரின் ஆலோசனையின் பேரில் , வழக்கமான இடைவெளியில் பரசிட்டமோல் மாத்திரையை மீண்டும் எடுத்துக் கொண்டார். அதுவும் ஆதாரமாக உள்ளது. மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு , பாரசிட்டமால் வழங்கப்பட்டது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு மறைந்த முதல்வரின் உண்மையான உடல்நிலையை அறிய ஆணையத்திற்கு வேறு எந்த ஆதாரமும் இல்லை.

12. மறைந்த முதல்வர் உடல்நிலை சரியில்லாமல் இருந்த போதிலும் , தலைமைச் செயலகத்திற்கு ஏழு பேருந்திகள் தொடங்கி வைக்கும் விழா மற்றும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட மெட்ரோ ரயில் விழாவில் கலந்து கொள்ளச் சென்றார் என்பது அப்போதைய தலைமைச் செயலாளர் சாட்சியமாகும். 21.9.2016 அன்று காலை 10 மணிக்குப் பிறகு அவர் சுமார் 45 நிமிடங்கள் தலைமைச் செயலகத்தில் இருந்தார். சசிகலாவின் கூற்றுப்படி அவர் உடல்நிலை சரி இல்லாத்தைக் கருத்தில் கொண்டு , தலைமைச் செயலகம் வருவதைத் தவிர்க்க சசிகலா அறிவுறுத்தியுள்ளார்..ஆனால் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, காணொலி காட்சி மூலம் மெட்ரோ ரயிலை பச்சைக் கொடியசைத்து தொடங்கி வைக்க இருப்பதால் மறைந்த முதல்வர் விழாவில் பங்கேற்பது அவசியமாகிறது என்று தெரிவித்திருந்தார். அவர் தலைமைச் செயலகத்திற்குச் சென்று வீட்டுக்குத் திரும்பும் போது ஓட்டுநர், தலைமைச் செயலாளர், சிறப்புப் பணி அதிகாரி ஷீலா பாலகிருஷ்ணன் ஆகியோரால் குறிப்பிடப்பட்டது. விழாவின் போது மறைந்த முதல்வருக்கு பின்னடைவு ஏற்பட்டது என்று இந்த சாட்சிகள் யாரும் தெரிவிக்கவில்லை. ஆனால், வீடு திரும்பும்போது , சாலை ஒரங்களில் கட்சிக்காரர்கள் நிற்கும் தூரம் வரை மெதுவாகச் செல்லுமாறும் , அதன்பின்னர் அவருக்கு உடல்நலமின்மையால் விரைந்து செல்லுமாறும் ஓட்டுநரிடம் தெரிவித்து போயஸ் கார்டனை அடைந்தார்.

13.இந்த சாட்சியங்களிலிருந்து 21.09.2016 அன்று, மறைந்த முதல்வருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது என்ற சசிகலா வின் அறிக்கை மறைந்த முதல்வர் மூன்று நாட்களாக அதிக காய்ச்சலில் இருந்தார் என்பதும் , அதற்காக அவர் பரசிட்டமோல் எடுத்துக் கொண்டார் என்பதும் தெளிவாகிறது.

14. 21.09.2016 அன்று , காலை 11 மணிக்குப் பிறகு , போயஸ் கார்டனை அடைந்ததும் , அவர் காரிலிருந்து இறங்கும் போது தன் நிலை தடுமாறி கீழே விழவிருந்து , சமாளித்து , தனித்து வீட்டிற்குள் சென்றார். இந்த சாட்சியங்களிலிருந்து , வீடு திரும்பியதும், மறைந்த முதல்வர் உடல்நிலை சரியில்லாமல் , காரிலிருந்து இறங்கும் போது தன்-நிலை இழந்தும் அவரால் வீட்டுக்குள் வர முடிந்தது என இந்த ஆணையம் முடிவு செய்கிறது என்று ஆணையம் தன் கருத்தை சமர்பித்துள்ளது.